உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் ‘வாட்ஸ்–அப்’பில் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் ‘வாட்ஸ்–அப்‘பில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அனைவருக்கும் தரம் மற்றும் பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த கடந்த 2011–ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் “உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006“ அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இது ஏற்கனவே இருந்த சட்டத்தில் திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்தது. பழைய சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி வந்த உரிமத்தை புதிய சட்டதில் உணவு பாதுகாப்புத் துறையே வழங்குகிறது. ஏற்கனவே உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 அன்று முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் அவர்களது கொள்முதலுக்கு ஏற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.அதன்படி உரிமம் அல்லது பதிவு பெற வேண்டியவர்களான, உணவு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்களர்கள், அரிசி ஆலைகள், உணவு சேமிப்பு கிடங்குகள், பால் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், உணவு விடுதிகள், கல்லூரி மற்றும் பள்ளி கேன்டீன்கள், இறைச்சி கடைகள், நியாய விலைக்கடைகள், மொத்தம் மற்றும் சில்லரை உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உட்பட அனைவரும் தங்கள் நிறுவனம் மற்றும் வாகன விவரங்களை தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவித்து பதிவு அல்லது உரிமம் பெற வேண்டும்.ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு கீழ் உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அனைவரும் ஆண்டுக்கு கட்டணமாக ரூ.100–யை செலுத்து சீட்டு மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி www.foodlicencing.fssai.gov.in என்ற இணையதள முகவரியில், தங்களது புகைப்படம், அடையாள அட்டை மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவு சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சில்லரை விற்பனையாளருக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரமும், தயாரிப்பாளர்களின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு கீழ் இருந்தால் அவர்கள் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு மெட்ரிக் டன்னுக்கு மேல் இருந்தால் அவர்கள் ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்து சீட்டு மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தி www.foodlicencing.fssai.gov.in என்ற இணையதள முகவரில், தங்களது புகைப்படம், அடையாள அட்டை மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு உணவுப்பொருள் விற்பனையாளர்களில் 7 ஆயிரத்து 462 பேர் உரிமமும், 984 பேர் பதிவு சான்றிதழும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, பாதுகாப்பற்ற, தரக்குறைவான உணவுப்பொருட்களை விற்பனை செய்த 42 வியாபாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் உணவுப்பொருட்கள் தொடர்பான தங்களின் புகார்களை 94440–42322 என்ற ‘வாட்ஸ்–அப்‘ எண்ணில் தெரிவிக்கலாம். உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் மாவட்ட உணவு பாதுகாப்பு தலைமை அலுவலத்திற்கு 0461– 2340699 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் ‘வாட்ஸ்–அப்’பில் தெரிவிக்கலாம்
Reviewed by thoothukudibazaar
on
02:33
Rating:
No comments: